வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் பொதுமக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே வாழ்க்கை செலவை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனினும் மக்களின் வருமானம் அதிகரிக்க வில்லை. இதனால் மூன்று வேளை உணவு உண்பதில் பல குடும்பத்தினர் சிரமப் படுகின்றனர்.
நாட்டில் அதிகமான அரச உத்தியோகத்தர்கள் குறைந்த சம்பளம் பெறுவோராவர். பிள்ளைகளின் கல்விச் செலவு, உணவுச் செலவு என்பவற்றை சமாளிக்க முடியாமல் இவர்கள் கஷ்டப் படுகின்றனர்.
இந்த நிலைமையினால் பிள்ளைகளின் உணவுத்தேவையை சரியாகப் பூர்த்தி செய்ய முடியாத நிலை பெற்றோருக்கு ஏற்படுகின்றது. இதனால் போசாக்கு குறைந்த பிள்ளைகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.
மக்களின் வாழ்க்கை தரத்தைப் பேணுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்தப் பொறுப்பை அரசாங்கம் சரிவர நிறைவேற்ற வேண்டும்.
எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் உடன் கவனம் செலுத்த வேண்டும். மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.







