இலங்கை சுங்கத் திணைக்களம் மீண்டும் தனது மாதாந்த வருவாய் இலக்கை முன்கூட்டியே எட்டியுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து எட்டாவது மாதமாக நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கை விட அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளது.
ஆகஸ்ட் மாதத்திற்காக 190.3 பில்லியன் ரூபாய் வருவாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும், ஆகஸ்ட் 27ஆம் திகதிக்குள் சுங்கத் திணைக்களம் 199.6 பில்லியன் ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. அன்றைய தின முடிவில் வருவாய் 200 பில்லியன் ரூபாயைத் தாண்டும் என அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.
2026ஆம் ஆண்டுக்காக இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு 2,207 பில்லியன் ரூபாய் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதியில் எதிர்பார்க்கப்படும் வீழ்ச்சி காரணமாக, இந்த இலக்கு கடந்த ஆண்டை விட 13.5% குறைவாகும்.
எவ்வாறாயினும், முதல் எட்டு மாதங்களிலேயே சுங்கத் திணைக்களம் 1,832.7 பில்லியன் ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. இது முழு ஆண்டிற்கான இலக்கில் 83% ஆகும்.
2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை, அந்நியச் செலாவணி கையிருப்பு ஸ்திரமடைந்தமை மற்றும் நுகர்வோர் கேள்வி படிப்படியாக மீட்சியடைந்தமை ஆகியவை இந்தச் சிறப்பான செயல்திறனுக்கு காரணமாக அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டமை, பொருட்களின் மதிப்பைக் குறைத்து அறிவித்தல் மற்றும் தவறான தகவல்களை வழங்குதல் தொடர்பான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டமை, அத்துடன் பொருட்களின் மதிப்பீட்டு நடைமுறைகள் மேம்படுத்தப்பட்டமை ஆகியவையும் அரச வருவாய் அதிகரிப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன.
2025ஆம் ஆண்டில் சுங்கத் திணைக்களம் 2,557.535 பில்லியன் ரூபாய் வருவாயை ஈட்டியிருந்ததுடன், அது நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டியிருந்தது. இதன்மூலம் அரச திறைசேரிக்கு அதிகளவில் வருவாய் வழங்கும் நிறுவனமாக சுங்கத் திணைக்களம் தனது முக்கியத்துவத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
IMF ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் கீழ் அரசாங்கம் நிர்ணயித்துள்ள நிதி இலக்குகளை அடைவதில் சுங்கத் திணைக்களம் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.









