அரசாங்கத்தின் “பிரஜா சக்தி” தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் மொத்தம் 786 அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.இதற்காக ரூ.997.84 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (28) நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
முன்னெடுக்கப்படவுள்ள 786 திட்டங்களில் 263 திட்டங்கள் வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்களாகும். இதற்காக சுமார் ரூ.296.19 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும், 286 உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்காக ரூ.543.22 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் குறைந்தபட்சம் ஒரு அபிவிருத்தித் திட்டத்தையாவது நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, 2026ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தின் ஊடாக “பிரஜா சக்தி” திட்டத்திற்கு ரூ.25 பில்லியன் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவரை நாடளாவிய ரீதியில் ரூ.22.425 பில்லியன் பெறுமதியான 15,646 திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதில் 8,323 வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்களும், 7,323 உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களும் அடங்குகின்றன.
அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துவதுடன், அரச நிதி ஒழுக்கத்தைப் பேணவும், பொதுமக்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உபாலி பன்னில அறிவுறுத்தியுள்ளார்.









