ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சனிக்கிழமை (29) கீழ் மல்வத்து ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.இந்தத் திட்டம் நிறைவடைந்த பின்னர் வடமத்திய மாகாணத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இடைநிறுத்தப்பட்டிருந்த இத்திட்டம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டுக்காக 5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், முழுமையாக உள்நாட்டு நிதி மூலம் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 2029ஆம் ஆண்டு இறுதிக்குள் திட்டத்தை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தந்திரிமலை, போகொட பகுதியில் மல்வத்து ஓயாவின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும் இந்த நீர்த்தேக்கம் 169,400 ஏக்கர் அடி நீரை சேமிக்கும் கொள்ளளவைக் கொண்டிருக்கும்.
3.4 கிலோமீற்றர் நீளமான பிரதான அணையின் நிர்மாணப் பணிகளில் சுமார் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர். மின்நிலையம் உள்ளிட்ட ஏனைய திட்டக்கூறுகளுக்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தின் மூலம் அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவதுடன், விவசாயத்திற்கான நீர் வசதியை விரிவுபடுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், வெள்ளப்பெருக்கு கட்டுப்பாடு, நீர்மின் உற்பத்தி, சுற்றுலாத்துறை மற்றும் நன்னீர் மீன்பிடி உள்ளிட்ட துறைகளுக்கும் இந்தத் திட்டம் பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தால் பாதிக்கப்படும் 315 குடும்பங்களின் தேவைகளுக்கும் தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அவர்களுக்கு காணி மற்றும் மின்சாரம், குடிநீர் வசதிகளுடன் கூடிய வீடுகளை வழங்குவதுடன், நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்தவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.











