கிவ் நகரின் குடியிருப்புப் பகுதிக்கு அருகிலுள்ள உக்ரைன் இராணுவ ஆயுதக் களஞ்சியத்தின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.வெள்ளிக்கிழமை பின்னிரவில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அப்பகுதியில் இருந்து சுமார் 400 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தாக்குதலின் போது ஆயுதக் களஞ்சியத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பீரங்கி குண்டுகள், கண்ணிவெடிகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அருகிலிருந்த முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகம் உள்ளிட்ட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
இந்த ஆயுதச் சேமிப்பு தளம் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் இருந்திருக்கக் கூடாது என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் வெடிபொருட்களைச் சேமித்து வைத்தமை தொடர்பான அலட்சியம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிவ் நகருக்கு அருகிலுள்ள ஆயுதக் களஞ்சியங்கள் மீது சமீப மாதங்களில் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும். இதனால் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் கடும் கோபம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் 42 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் நான்கு குழந்தைகளும் அடங்குகின்றனர்.மேலும், தாக்குதலின் தாக்கத்தால் அக்கிராமத்தில் சுமார் 130 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.









