தெற்கு லெபனானின் பல பகுதிகளில் இஸ்ரேல் படைகள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் (NNA) வெளியிட்ட தகவலின்படி, தெற்கு லெபனானின் ஹுலா (Hula) நகரில் முதியோருக்கான சமூக பராமரிப்பு இல்லம் ஒன்றை இஸ்ரேல் படைகள் வெடிக்கச் செய்து தகர்த்துள்ளன.
மேலும், ஜர்மக் (Jarmaq) மற்றும் கஃபர் ரெமான் (Kfar Reman) பகுதிகளுக்கு இடையிலுள்ள திறந்தவெளிப் பகுதியில் இஸ்ரேலிய ஆளில்லா விமானம் (Drone) மூலம் வழிகாட்டப்படும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் NNA தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, ஸவ்தர் அல்-கர்பியே (Zawtar al-Gharbiyeh) நகரின் புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேல் படைகள் பீரங்கித் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மார்கபா (Markaba) மற்றும் ரப் எத்-தலாத்தீன் (Rab el-Thalathine) நகரங்களுக்கு இடையிலான பகுதியில் பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தத் தகவல்களை சர்வதேச ஊடகமான அல்ஜசீராவும் மேற்கோள் காட்டியுள்ளது.









