ஊழல் வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் ஈக்வடோர் ஜனாதிபதி லெனின் மொரேனோவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய நீர்மின் நிலையமான Coca Codo Sinclair நீர்மின் திட்டத்தின் கட்டுமானத்துடன் தொடர்புடைய ஊழல் வழக்கிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
73 வயதான மொரேனோ, சீன அரசுக்குச் சொந்தமான Sinohydro நிறுவனத்துடன் தொடர்புடைய லஞ்சத்தைப் பெற்றதாக ஈக்வடோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், அவர் இனிமேல் எந்தவொரு அரசுப் பதவியையும் வகிக்க முடியாத வகையில் நிரந்தரமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளார்.
நடக்க முடியாத உடல் ஊனத்தைக் கொண்டுள்ள மொரேனோ, நீதிமன்றத் தீர்ப்பின்படி வீட்டுக் காவலில் வைத்து இந்தத் தண்டனையை அனுபவிப்பார் என Associated Press தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு, முன்னாள் ஜனாதிபதி ரஃபேல் கொரியாவின் ஆட்சிக் காலத்தில் மொரேனோ துணை ஜனாதிபதியாகப் பதவி வகித்த 2007–2013 காலப்பகுதியுடன் தொடர்புடையது. பின்னர் மொரேனோ 2017ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
Coca Codo Sinclair நீர்மின் திட்டத்தைச் சுற்றி பல ஆண்டுகளாக ஊழல் வலையமைப்பு இயங்கி வந்ததாக வழக்குத் தொடர்ந்த அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. திட்டத்தின் மொத்த மதிப்பில் சுமார் 4 சதவீதம் லஞ்சமாக வழங்கப்பட்டதாகவும், இந்த ஊழல் திட்டத்துடன் தொடர்புடையதாக சுமார் 76.1 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சத் தொகையை ஈக்வடோர் வழக்குத் தொடருநர்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொரேனோவின் மனைவி, மகள் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களும் இந்த வழக்கில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர். அவரது மனைவிக்கும் மகளுக்கும் தலா 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோதமாகப் பெற்ற தொகையின் மூன்று மடங்கு தொகையை குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட அனைவரும் திருப்பிச் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான Coca Codo Sinclair நீர்மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை Sinohydro நிறுவனம் 2010ஆம் ஆண்டு ஆரம்பித்தது. பின்னர் 2016ஆம் ஆண்டு அந்தத் திட்டம் ஈக்வடோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
எனினும், திட்டம் நிறைவடைந்த பின்னர் அதன் தொழில்நுட்ப மற்றும் கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.லெனின் மொரேனோ 2007 முதல் 2013 வரை ஈக்வடோரின் துணை ஜனாதிபதியாகவும், 2017 முதல் 2021 வரை ஜனாதிபதியாகவும் பதவி வகித்தார்.
ஊழல் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஈக்வடோர் ஜனாதிபதிகளில் ரஃபேல் கொரியா மற்றும் ஜமில் மஹுவாத் ஆகியோருக்குப் பின்னர், இந்தத் தண்டனையைப் பெறும் மூன்றாவது முன்னாள் ஜனாதிபதியாக லெனின் மொரேனோ உள்ளார்.









