யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள காலி கோட்டைக்குள் உள்ள Church Street வீதியின் ஒரு பகுதி, நிலத்தடி வடிகால் கட்டமைப்புடன் தொடர்புடைய இடிவு காரணமாக முழுமையாக மூடப்பட்டுள்ளது.
இந்த இடிவு சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்டதாகவும், இதனால் அப்பகுதியில் வசிப்பவர்களும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும் தொடர்ந்து பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் எதிர்வரும் சுற்றுலாப் பருவகாலம் நெருங்கி வரும் நிலையில், வீதி மூடப்பட்டுள்ளமை தொடர்பில் கவலை அதிகரித்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க காலி கோட்டையைப் பார்வையிட வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் இது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, இடிவு ஏற்பட்டுள்ள பகுதியைச் சுற்றியுள்ள பகுதி குறிப்பாக ஆபத்தானதாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமை தொடர்பில் பல்வேறு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.காலி மாநகர சபை இதற்கு பதிலளித்து, பாதிக்கப்பட்ட வடிகால் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள நிலத்தடி வடிகாலை சுத்தப்படுத்தும் பணிகளை தற்போது முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சுற்றுலாப் பருவகாலத்திற்கு முன்னர் சேதமடைந்த வீதிப் பகுதியை அவசரமாக சீரமைத்து, வீதியை மீண்டும் திறக்குமாறு அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் மற்றும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாமதம் தொடருமானால், இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான காலி கோட்டைக்கு வரும் வர்த்தகர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மேலும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.









