இலங்கையின் டிஜிட்டல் அடையாள அட்டை (Digital ID) திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படுவதற்கான தெளிவான காலக்கெடுவை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
‘X’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள நாமல் ராஜபக்ச, கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் அரசாங்கம் தொடர்ச்சியாக பல்வேறு காலக்கெடுக்களை அறிவித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
அவற்றில், 2026 ஏப்ரல் மாதத்திற்குள் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த காலக்கெடு தற்போது கடந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, இந்த ஆண்டின் இறுதிக்குள் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும் என பொதுமக்களிடம் தெரிவிக்கப்படுவதாகக் கூறிய அவர், “இன்னும் எத்தனை காலக்கெடுக்களை மக்கள் கடந்து காத்திருக்க வேண்டும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
“டிஜிட்டல் மாற்றம் என்பது அறிவிப்புகளை வெளியிடுவதைக் காட்டிலும் அதிகமானது. அது நடைமுறைப்படுத்தல், பொறுப்புக்கூறல் மற்றும் அறிவிக்கப்பட்ட காலக்கெடுக்களை கடைப்பிடிப்பதை உள்ளடக்கியது” என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.எனவே, டிஜிட்டல் அடையாள அட்டை உண்மையில் எப்போது வழங்கப்படும் என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.








