இலங்கையைச் சூழவுள்ள பல கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில் கடுமையான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று சனிக்கிழமை (29) காலை 10.30 மணிக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி வரை அமுலில் இருக்கும்.
காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையிலான கடற்பரப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்பு ஆகியவை இந்த எச்சரிக்கையின் கீழ் உள்ளடங்குகின்றன.
குறித்த கடற்பரப்புகளில் அவ்வப்போது கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதுடன், மணிக்கு 50–60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் சுமார் 2–2.5 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இதனால் கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.









