இந்திய வீடமைப்புத் திட்டத்தின் 3ஆம் கட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 165 காணி உறுதிப் பத்திரங்களை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கையளித்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி, பதுளை பூனாகலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இந்த உறுதிப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டன. இந்திய பதில் உயர்ஸ்தானிகர் மைத்ரேயி குல்கர்ணி முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, இலங்கை அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட “நவோதயபுரம்” வீட்டுத் திட்டமும் திறந்து வைக்கப்பட்டது.அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்காக நவோதயபுரம் வீட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவலின்படி, இந்திய வீடமைப்புத் திட்டத்தின் 3ஆம் கட்டத்தின் கீழ் இலங்கையின் பெருந்தோட்ட சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு 4,000 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இறுதித் தொகுதி வீடுகள் 2026 ஏப்ரல் மாதம் இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனால் திறந்து வைக்கப்பட்டன.முழுமையான இந்திய வீடமைப்புத் திட்டத்திற்காக இந்திய அரசாங்கம் சுமார் 18.35 பில்லியன் இந்திய ரூபாய் மானிய உதவியை வழங்கியுள்ளது.
முதல் இரண்டு கட்டங்களின் கீழ் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 46,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.2017ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட 4ஆம் கட்டத் திட்டத்தின் கீழ், பெருந்தோட்ட சமூகத்திற்காக மேலும் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதன் முதல் 1,300 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான இந்தியாவின் ஒட்டுமொத்த அபிவிருத்தி ஒத்துழைப்பு 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது. இதில் சுமார் 880 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மானிய உதவியாகும். இந்த ஒத்துழைப்பு இலங்கையின் 25 மாவட்டங்களிலும் பல்வேறு திட்டங்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.










