நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கை தேசிய சர்வமத குரு ஒன்றியத்தின் சர்வமதத் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வமதத் தலைவர்களான கௌரவ சாஸ்திரபதி கலாநிதி கலகம தம்மரன்ஸி நாயக தேரர், சிவ ஸ்ரீ கலாநிதி பாபுசர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி மற்றும் கலாநிதி நிஷான் சம்பத் குரே பாதிரியார் உள்ளிட்டோர் இந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
வெள்ள அனர்த்தத்தால் உயிரிழந்த அனைவருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள அவர்கள், அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கும், வீடுகள், சொத்துக்கள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் தமது ஆறுதலைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனவலிமை, தைரியம் மற்றும் ஆறுதல் கிடைக்க வேண்டும் என மத வேறுபாடுகளைக் கடந்து பிரார்த்திப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களை மீட்பதற்கும் நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயல்படும் மீட்புப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், மனிதாபிமான அமைப்புகள் மற்றும் அதிகாரிகளின் சேவைகளையும் சர்வமதத் தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.
கருணை, மனிதநேயம் மற்றும் சகோதரத்துவம் போன்ற பொதுவான மதிப்புகளின் அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த துயரமான தருணத்தில் நேபாள மக்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த பேரழிவிலிருந்து வலிமையுடன் மீண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப நேபாள மக்களுக்கு மனவலிமையும் தைரியமும் கிடைக்க இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் சர்வமதத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.









