நியூடெல்லியில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களைச் சேர்ந்த 19 தூதர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், ஆகஸ்ட் 26 முதல் 28ஆம் திகதி வரை கண்டிக்கு விஜயம் செய்து கண்டி எசல பெரஹராவை பார்வையிட்டனர்.
இலங்கையின் கலாசார மற்றும் மத பாரம்பரியத்தை நேரடியாக அனுபவிக்கும் வகையில் இந்த மூன்று நாள் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தூதர்கள் ஸ்ரீ தலதா மாளிகை, சர்வதேச பௌத்த அருங்காட்சியகம் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிட்டதுடன், ஆகஸ்ட் 27ஆம் திகதி நடைபெற்ற ரந்தோலி பெரஹராவையும் நேரில் கண்டுகளித்தனர்.
மேலும், கண்டிய பாரம்பரிய இரவு உணவு, உள்ளூர் உணவு மற்றும் கலாசார நிகழ்வுகளையும் அனுபவித்தனர்.
இலங்கையின் கலாசார பாரம்பரியத்தை வெளிநாட்டு தூதர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், இலங்கைக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இடையிலான கலாசார மற்றும் மக்கள் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









