முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, தனது பதவிக்காலத்தில் வாகனங்கள் மற்றும் எரிபொருள் பயன்பாடு தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளார்.
2015 முதல் 2024 வரையிலான நாடாளுமன்ற அதிகாரிகளின் வாகனப் பயன்பாடு தொடர்பான விசேட தணிக்கை அறிக்கையின் தகவல்கள் அரசியல் நோக்கங்களுக்காக திரிபுபடுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சபாநாயகராக இருந்தபோது 9 வாகனங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவது முற்றிலும் பொய்யானது எனத் தெரிவித்த அவர், நாடாளுமன்றத்தால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட வாகனங்களையே பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புத் தேவைகள் காரணமாக கூடுதல் வாகனங்கள் வழங்கப்பட்டதாகவும், பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையின் பேரில் அதிக எரிபொருள் பயன்படுத்தும் குண்டுதுளைக்காத வாகனம் வழங்கப்பட்டதே எரிபொருள் செலவு அதிகரிக்க முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தவறுகள் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தாம் தயார் எனவும், வாகன மற்றும் எரிபொருள் பயன்பாடு தொடர்பான அனைத்து பதிவுகளும் நாடாளுமன்றத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தணிக்கை அறிக்கையின் தரவுகளை அரசியல் இலாபத்திற்காக திரிபுபடுத்த வேண்டாம் எனவும் முன்னாள் சபாநாயகர் கேட்டுக்கொண்டுள்ளார்.









