மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை தொடர்பான சட்டமூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதியுதவியுடன் இந்த அதிகாரசபை நிறுவப்படவுள்ளதாகவும், மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கான முழுமையான அதிகாரங்கள் அதற்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மத்திய மலைநாடு இலங்கையின் இதயம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மலைச்சரிவுகள், நீரூற்றுகள் வற்றுதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அழிவுகளைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் அவசியம் எனத் தெரிவித்தார்.
மேலும், மலையக மக்களின் காணி, வீடமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் வருமானம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தோட்ட நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் 2042ஆம் ஆண்டு நிறைவடையும் போது மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.









