நாட்டின் பல முக்கிய மாவட்டங்களில் நிலவும் கடும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவாகக் காப்பீட்டு நட்டஈடு வழங்குவதற்காக அரசாங்கம் ரூ.3,000 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.
தற்போது நிலவும் எல் நினோ சூழ்நிலையின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வறட்சியினால் மொனராகலை, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, அனுராதபுரம் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த மாவட்டங்களில் 7,000க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன.
இதன்படி, நெற்செய்கையில் அனுராதபுரம் மாவட்டத்தில் 1,923 ஏக்கரும், மொனராகலையில் 1,401 ஏக்கரும், பொலன்னறுவையில் 1,259 ஏக்கரும், அம்பாறையில் 1,055 ஏக்கரும், அம்பாந்தோட்டையில் 783 ஏக்கரும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, பயிர்ச் சேதங்களை மதிப்பிடும் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
விவசாய மற்றும் விவசாய பாதுகாப்பு சபையின் கள அதிகாரிகள் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் அடங்கிய குழுக்கள் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்குச் சென்று சேதங்களை மதிப்பிட்டு வருகின்றன.
இந்த நிவாரணத் திட்டத்தின் கீழ் நெல், சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா மற்றும் மிளகாய் ஆகிய ஆறு பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.100,000 வீதம் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் வரையான நிலத்துக்கு நட்டஈடு வழங்கப்படும்.
இதுவரை தங்களது பயிர்ச் சேதங்களை அறிவிக்காத விவசாயிகள், உடனடியாக விவசாய அபிவிருத்தி நிலையங்களில் பராமரிக்கப்படும் சேத அறிவிப்புப் புத்தகத்தில் பதிவுசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பிரதேச விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் அல்லது கள அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பயிர்ச் சேதம் தொடர்பான தகவல்களை வழங்க முடியும்.
மேலதிக தகவல்களுக்கு விவசாய மற்றும் விவசாய பாதுகாப்பு சபையின் 1918 என்ற குறுஞ்செய்தி/அழைப்பு இலக்கத்தைத் தொடர்புகொள்ள முடியும்.









