செங்கடலில் யன்பு (Yanbu) துறைமுக நகருக்கு அப்பால், சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஹூதி கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
“அம்சான்” (Amzan) என்ற குறித்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹூதிகள் திங்கட்கிழமை (24) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சவுதி தேசிய கப்பல் போக்குவரத்து நிறுவனமான பஹ்ரிக்கு (Bahri) சொந்தமான குறித்த கப்பல் மீது பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹூதிகளின் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, “அம்சான்” கப்பல் செங்கடலில் கடல்சார் சம்பவம் ஒன்றில் சிக்கியதை பஹ்ரி நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது. கப்பலுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயற்படுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், கப்பலில் இருந்த அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பஹ்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்தத் தாக்குதல் தொடர்பாக சவுதி அதிகாரிகளிடமிருந்து இதுவரை உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
இதற்கு முன்னதாக, யன்புவிலிருந்து சுமார் 63 கடல் மைல் (117 கிலோமீட்டர்) மேற்கே எண்ணெய்க் கப்பல் ஒன்று அடையாளம் தெரியாத பொருளால் தாக்கப்பட்டதாக பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கை அமைப்பு தெரிவித்திருந்தது.
செங்கடல் வழியாக சவுதியின் எரிசக்தி ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹூதிகள் தெரிவித்துள்ளனர்.
சவுதியின் முக்கிய செங்கடல் எண்ணெய்த் துறைமுகமான யன்புவிலிருந்து நாளொன்றுக்கு மில்லியன் கணக்கான பீப்பாய்கள் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஈரானால் ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ள நிலையில், அதனைத் தவிர்த்து சவுதி எண்ணெய்க் கப்பல்கள் செல்லும் முக்கிய பாதையாக யன்பு துறைமுகம் மாறியுள்ளது.
சவுதியுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு செங்கடலில் தடையை அறிவித்த ஹூதிகள், கடந்த மாதம் முதல் அப்பகுதியில் கப்பல்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
“சவுதி எதிரிக்கு எதிராக கடல்சார் போக்குவரத்துக்கு தடை விதிக்கும் ஆயுதப் படைகளின் முடிவை நடைமுறைப்படுத்தும் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது” என ஹூதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தாக்குதல் துல்லியமாகவும் நேரடியாகவும் நடத்தப்பட்டதாகவும், இதனால் கப்பலில் தீ ஏற்பட்டதுடன், தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் இருந்த ஏனைய சில கப்பல்களும் அங்கிருந்து வெளியேறியதாகவும் ஹூதிகள் தெரிவித்துள்ளனர்.









