இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 94,037 ஆக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,962 ஆகும். ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 8,701 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாத வாரியாக, ஜனவரியில் 7,866 பேரும், பெப்ரவரியில் 5,721 பேரும், மார்ச்சில் 6,013 பேரும், ஏப்ரலில் 5,651 பேரும், மே மாதத்தில் 8,590 பேரும் டெங்கு நோயாளர்களாகப் பதிவாகியுள்ளனர்.
நாட்டின் மொத்த டெங்கு நோயாளர்களில் 52.93 சதவீதமானோர், அதாவது 49,771 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். தென் மாகாணத்தில் 13,763 பேரும், மத்திய மாகாணத்தில் 8,519 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 20,034 ஆகும். கொழும்பு மாவட்டத்தில் 18,652 பேரும், கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் மாத்திரம் 3,787 பேரும் பதிவாகியுள்ளனர்.
மேலும், கண்டி மாவட்டத்தில் 6,818 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6,093 பேரும், காலி மாவட்டத்தில் 6,079 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 5,160 பேரும், மாத்தறையில் 5,003 பேரும், கேகாலையில் 2,713 பேரும், குருநாகலில் 2,651 பேரும், ஹம்பாந்தோட்டையில் 2,510 பேரும் டெங்கு நோயாளர்களாகப் பதிவாகியுள்ளனர்.
நாடு முழுவதும் அதிக அபாயம் உள்ள 76 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், காய்ச்சல் ஏற்பட்டால் தாமதமின்றி தகுதியான மருத்துவரிடம் சிகிச்சை பெறுமாறும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.









