பெரும்போகத்தை முன்கூட்டியே ஆரம்பித்து, குறிப்பிடத்தக்க அளவு நீரை சேமித்து, அடுத்த சிறுபோகத்தையும் மார்ச் 15ஆம் திகதி அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்திற்குள் ஆரம்பிக்க வேண்டும் என இலங்கை மகாவலி அதிகாரசபையின் நீர் முகாமைத்துவ செயலகப் பணிப்பாளர் பொறியியலாளர் நிலந்த தனபால தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இரண்டு போகங்களையும் எவ்வித பிரச்சினைகளுமின்றி வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மகாவலி அமைப்பிற்குட்பட்ட நீர்த்தேக்கங்களில் தற்போது 54 சதவீத நீர் கொள்ளளவு காணப்படுவதாகவும், இது கணிசமான மட்டம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, வளவை அமைப்பின் நீர் கொள்ளளவு சுமார் 57 சதவீதமாக உள்ளதாகவும் பொறியியலாளர் நிலந்த தனபால தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டாலும், டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் உலர் வலயத்திற்கு கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்காத நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தற்போதுள்ள நீர்வளங்களை திறம்பட முகாமைத்துவம் செய்து பெரும்போகத்தை முன்கூட்டியே ஆரம்பிப்பதுடன், சிறுபோகத்தையும் உரிய காலத்திற்கு முன்னதாக ஆரம்பிப்பதன் மூலம் இரண்டு போகங்களையும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.








