இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட பரபரப்பான மோதல் காரணமாக, இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொள்ளக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வாலை 45 ஓட்டங்களுக்கு இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ ஆட்டமிழக்கச் செய்தார். இதனைத் தொடர்ந்து பெர்னாண்டோ வழங்கிய ஆக்ரோஷமான ‘send-off’ காரணமாக ஜெய்ஸ்வால் திரும்பி வந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதன்போது, ஜெய்ஸ்வாலின் தலைக்கவசம் பெர்னாண்டோவின் நெற்றியில் பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நிலைமை மோசமடைவதைத் தடுக்கும் வகையில் இலங்கை அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா இருவருக்கும் இடையில் வந்து அவர்களைப் பிரித்தார்.
இந்திய அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், போட்டியின் பரபரப்பான சூழ்நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறியதுடன், ஜெய்ஸ்வால் பெர்னாண்டோவுக்கு மிக அருகில் சென்றிருக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டார்.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளர் ரயன் வான் நீக்கெர்க், இந்த விவகாரம் போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்டின் முடிவுக்கு விடப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் சர்வதேச போட்டியின்போது மற்றொரு வீரருடன் தகாத உடல் தொடர்பை ஏற்படுத்துவது தொடர்பான ICC நடத்தை விதிமுறையின் 2.12ஆம் பிரிவின் கீழ் பரிசீலிக்கப்படலாம்.
இது Level 1 குற்றமாகக் கருதப்பட்டால், உத்தியோகபூர்வ எச்சரிக்கை, போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் வரை அபராதம் மற்றும் ஒன்று அல்லது இரண்டு demerit புள்ளிகள் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படலாம்.
இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன்னர் போட்டி அதிகாரிகள் சம்பவத்தை ஆய்வு செய்யவுள்ளனர்.









