ஆசியக் கிரிக்கெட் சபையின் (ACC) தலைவர் பதவியை வகிப்பதற்குத் தகுதியுடைய சுழற்சி முறையிலான முழுமையான உறுப்பினர் சபைகளில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையையும் இணைத்துக்கொள்வதற்கு ஆசியக் கிரிக்கெட் சபை அனுமதி அளித்துள்ளது.
தாய்லாந்தின் பேங்கொக்கில் அனைத்து ACC உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற ஆசியக் கிரிக்கெட் பேரவையின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் (AGM) இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
முன்னதாக, ஆசியக் கிரிக்கெட் சபையின் தலைமைப் பதவி பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வந்தது.
ஆப்கானிஸ்தானின் இணைப்பால் இந்தச் சுழற்சி ஐந்து முழுமையான உறுப்பினர் சபைகளாக விரிவடைகிறது.
இத்தீர்மானம் ஆசியக் கிரிக்கெட் சபையின் ஆளுமைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், அதன் டெஸ்ட் விளையாடும் முழுமையான உறுப்பினர்களிடையே விரிவான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதிலும் ஒரு முக்கியமான நோக்காக அமைந்துள்ளது.
இதேவேளை எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் உப தலைவரான காலித் அல் ஜாரூனியை ஆசியக் கிரிக்கெட் சபையின் புதிய உப தலைவராக வருடாந்தப் பொதுக்கூட்டம் ஏகமனதாகத் தேர்ந்தெடுத்தது.
மேலும், உறுப்பினர்கள் 2026–2028 தவணைக் காலத்திற்காக ஆசியக் கிரிக்கெட் சபையின் செயற்குழுவிற்கான பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுத்தனர்.








