2026 FIFA உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் அர்ஜென்டினா வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு FIFA நீண்டகால போட்டித் தடைகளையும் அபராதங்களையும் விதித்துள்ளது.
அர்ஜென்டினா மத்தியகள வீரர் லியாண்ட்ரோ பரேடெஸ் 10 சர்வதேச போட்டிகளில் விளையாடத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், 90,000 அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாவலர் நஹுவேல் மோலினாவுக்கு 7 போட்டிகள் தடை மற்றும் 90,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தியாகோ அல்மடாவுக்கு ஒரு போட்டி தடை மற்றும் 30,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா உதவிப் பயிற்சியாளர் ரொபர்டோ அயலாவுக்கு 3 போட்டிகள் தடை மற்றும் 30,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மோதலில் ஈடுபட்டமை தொடர்பில் ஸ்பெயின் மத்தியகள வீரர் கவிக்கும் ஒரு போட்டி தடை மற்றும் 30,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 19ஆம் திகதி நியூயோர்க்–நியூஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியதைத் தொடர்ந்து இந்த மோதல் இடம்பெற்றது.
மேலும், போட்டித் தொடரின் போது ஒழுக்க விதிமீறல்கள், பாகுபாடான நடத்தை மற்றும் அரசியல் பதாகை காட்சிப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக அர்ஜென்டினா கால்பந்து சங்கத்திற்கு 321,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அர்ஜென்டினா அடுத்த இரண்டு சொந்த மைதானப் போட்டிகளை 50 சதவீத பார்வையாளர் கொள்ளளவுடன் நடத்த வேண்டும் என FIFA உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடையின் ஒரு பகுதி பரிசோதனைக் காலத்திற்கு உட்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
FIFA-வின் தீர்ப்புகளுக்கான முழுமையான காரணங்களைப் பெற்றுக்கொண்டு, தடைகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்யத் தயாராகி வருவதாக அர்ஜென்டினா கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.









