இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட ஆடவர் திட்டத்தின் துடுப்பாட்ட பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஹஷான் திலகரட்ண நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டின் தேசிய உயர் செயல்திறன் நிலையத்தில் பணியாற்றவுள்ள அவர், சிரேஷ்ட ஆடவர் திட்டத்தின் கீழ் தேசிய வீரர்களுடன் இணைந்து செயற்படவுள்ளார்.
முன்னதாக இலங்கை ஆடவர் தேசிய அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராகவும், இலங்கை மகளிர் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் ஹஷான் திலகரட்ண பணியாற்றியுள்ளார். அத்துடன், பங்களாதேஷ் மகளிர் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் அவர் செயற்பட்டுள்ளார்.
1989 முதல் 2003 வரை இலங்கை அணிக்காக விளையாடிய ஹஷான் திலகரட்ண, 83 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 200 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று, இரு போட்டி வடிவங்களிலும் 8,200-க்கும் அதிகமான சர்வதேச ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
அவரது நியமனம் 2026 ஆகஸ்ட் 20ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதுடன், 2027 டிசம்பர் 31ஆம் திகதி வரை தொடரும் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.








