முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
பாடசாலைக் கல்வியை நிறைவு செய்த உடனேயே இளைஞர்கள் முச்சக்கர வண்டி ஓட்டும் தொழிலில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் எதிர்காலம் பிள்ளைகளின் கைகளிலேயே தங்கியுள்ளதாகவும், அபிவிருத்தியடைந்த மனித வளத்தை உருவாக்குவதன் மூலமே இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மனித வள மேம்பாட்டிற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகவும், கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்த எதிர்பார்ப்பதாகவும், பாடசாலைக் கல்வியை முடித்தவுடன் முச்சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு வீதியில் இறங்கும் நிலை இருக்கக்கூடாது என்றும் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே மேலும் தெரிவித்தார்.









