பிரான்ஸ் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த 102 முன்னாள் தூதர்கள் அடங்கிய கூட்டணி, இஸ்ரேலுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து தடைகளை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேலின் கொள்கைகள், எதிர்காலத்தில் பலஸ்தீன தனிநாட்டை உருவாக்கும் வாய்ப்பை நிரந்தரமாக இல்லாமல் செய்யும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் திறந்த கடிதத்தில் எச்சரித்துள்ளனர்.
“பலஸ்தீனத்தில் சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்த பிரான்ஸும் பிரிட்டனும் இணைந்து செயல்பட வேண்டும்” என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஊடகமான Le Monde சனிக்கிழமை (22) வெளியிட்ட இந்தக் கடிதத்தில், இஸ்ரேலியர்களுக்கும் பலஸ்தீனர்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் இரு அரசுகளிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் பிரிட்டிஷ் தூதர்களான ஜெரமி கிரீன்ஸ்டொக் மற்றும் எமிர் ஜோன்ஸ் பாரி, அத்துடன் பிரான்ஸின் முன்னாள் மத்திய கிழக்கு விவகாரப் பணிப்பாளர்களான ய்வேஸ் ஓபின் டி லா மெஸ்ஸியெர் மற்றும் டெனிஸ் போஷார் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல தசாப்த கால இராஜதந்திர அனுபவம் கொண்டவர்கள்.
“பலஸ்தீனர்களின் வீடுகள் இடிக்கப்படுவதும், இஸ்ரேலிய இராணுவம் மற்றும் பொலிஸாரின் உடந்தையுடன் இடம்பெறும் கட்டுப்பாடற்ற குடியேற்றவாசிகளின் வன்முறையும் இனச் சுத்திகரிப்புக்கு சமமானவை. இஸ்ரேலை உண்மையான ஜனநாயக நாடாக உலகம் இனி கருதவில்லை” என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருத்துகள் தங்களால் உருவாக்கப்பட்டவை அல்ல என கையெழுத்திட்டவர்களில் ஒருவரும், ஈரான், கட்டார் மற்றும் யெமனுக்கான முன்னாள் பிரிட்டிஷ் தூதருமான நிக்கலஸ் ஹாப்டன் தெரிவித்துள்ளார்.
“இந்த வார்த்தைகள் எங்களுடையவை அல்ல. சர்வதேச சட்ட அமைப்புகள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நடுநிலையான நிலையில் நிபுணத்துவத்துடன் நிலைமையை அவதானித்து வருபவர்களின் கருத்துகளிலிருந்தே இவை பெறப்பட்டவை” என அவர் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.
2023 ஒக்டோபர் முதல் காஸாவில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் போரின் பின்னணியில் இந்தக் கடிதம் வெளியாகியுள்ளது. காஸா சுகாதார அமைச்சின் தகவலின்படி, 2023 ஒக்டோபர் முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் 72,000-க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
2025 ஒக்டோபரில் அமுலுக்கு வந்த போர் நிறுத்தத்திற்குப் பின்னரும் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் குறைந்தது 1,285 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குடியேற்ற விரிவாக்கமே உடனடி காரணம்!
ஹாப்டனைப் பொறுத்தவரை, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கான புதிய முயற்சியே இந்தக் கடிதத்திற்கான உடனடி காரணமாகும்.
“மேற்குக் கரையில் குடியேற்றங்களை உருவாக்க இஸ்ரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடருமானால், எதிர்காலத்தில் அங்கு பலஸ்தீன அரசை உருவாக்குவதற்கான வாய்ப்பை நடைமுறையில் முற்றாகத் தடுக்கக்கூடும்” என ஹாப்டன் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸும் பிரிட்டனும் 2025ஆம் ஆண்டு பலஸ்தீன அரசை அங்கீகரித்திருந்தன. தற்போது அந்த அங்கீகாரத்தை “அவசர நடவடிக்கைகள் மூலம் நடைமுறையில் அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும்” என முன்னாள் தூதர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலாம் உலகப் போருக்குப் பின்னர் பலஸ்தீனம், சிரியா மற்றும் லெபனான் மீது பிரிட்டனும் பிரான்ஸும் பெற்றிருந்த ஆணை ஆட்சிகளையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அந்த ஆட்சிகள் மத்திய கிழக்கின் தற்போதைய எல்லைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
“போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும் என்பதே எமது இரு நாடுகளின் நிலைப்பாடு. அவ்வாறு செய்தால் மட்டுமே இரட்டை நிலைப்பாடு என்ற குற்றச்சாட்டை எமது அரசாங்கங்கள் மறுக்க முடியும்” என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தூதர்கள் கோரும் நடவடிக்கைகள்!
பிரான்ஸும் பிரிட்டனும் இணைந்து பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கடிதத்தில் கோரப்பட்டுள்ளது:
- ஐரோப்பிய ஒன்றியம்–இஸ்ரேல் மற்றும் பிரிட்டன்–இஸ்ரேல் வர்த்தக ஒப்பந்தங்களை இடைநிறுத்துதல்.
- இஸ்ரேலுக்கான ஆயுதப் பரிமாற்றங்கள் மற்றும் இராணுவ ஒத்துழைப்பை நிறுத்துதல்.
- இஸ்ரேலிய குடியேற்றங்களுடன் வர்த்தகம் செய்வதைத் தடை செய்தல்.
- ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன நிலங்களில் தமது குடிமக்கள் சொத்துகளை வாங்குவதைத் தடை செய்தல்.
- UNRWA உள்ளிட்ட ஐ.நா. அமைப்புகள் ஊடாக காஸாவுக்கு தடையற்ற மனிதாபிமான உதவி கிடைப்பதை உறுதி செய்தல்.
- ஊடகவியலாளர்கள், இராஜதந்திரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பான அணுகலை உறுதி செய்தல்.
“சட்டத்தை மீறுவதற்கான தண்டனைகளை விதிக்கும் இந்த நடவடிக்கைகள், சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதுடன், வன்முறைக்கு மாற்று வழி இருப்பதையும் வெளிப்படுத்தும்” என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் இஸ்ரேலை மட்டுமே விமர்சிக்கவில்லை. “பிரதிநிதித்துவமற்றதும் செயலிழந்ததுமானது” என வர்ணிக்கப்படும் பலஸ்தீனத் தலைமையும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பலஸ்தீன அரசு ஜனநாயக ரீதியாகவும் சட்டத்துக்கு உட்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தல்கள் புதிய மாற்றத்திற்கான வாய்ப்பாக அமையலாம் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அரசாங்கங்கள் கண்டனம் வெளியிடுவதற்கு அப்பால் நடைமுறை நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளனவா என்பதே உண்மையான சோதனை என ஹாப்டன் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் அமெரிக்காவே மிகவும் செல்வாக்கு மிக்க நாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இஸ்ரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் அமெரிக்காவுக்கே அதிக செல்வாக்கு உள்ளது. தொடர்ந்து செயலற்றிருப்பது நீண்டகாலத்தில் தீர்க்க முடியாத பிரச்சினையையும், எதிர்கால வன்முறைகளையும் புதிய துயரங்களையும் உருவாக்கும்” என அவர் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.










