42ஆவது தேசிய மிலாதுன்-நபி அரச பெருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சமூக சேவை நிகழ்ச்சிகளின் தொடர், நீர்கொழும்பு போரத்தொட்டவில் இன்று (ஆகஸ்ட் 22) ஆரம்பமானது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்ச்சித் தொடரின் தொடக்க நிகழ்வு, போரத்தொட்ட பிரதான ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற சமய நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமானது.
இதனைத் தொடர்ந்து, பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலி, சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, நீர்கொழும்பு பிரதி மேயர் சட்டத்தரணி பஸீர் மொஹமட் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் பங்குபற்றலுடன், அல்-பலாஹ் மகா வித்தியாலயத்தில் இரத்ததான நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது, பிரதி அமைச்சர் முனீர் முளப்பரின் விசேட வேண்டுகோளின் பேரில், பேருவளையைச் சேர்ந்த தொழிலதிபர் அப்துல் லதீப் அவர்களால் அல்-பலாஹ் மகா வித்தியாலயத்திற்கு நவீன ஸ்மார்ட் போர்ட் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதனை பாடசாலையின் பிரதி அதிபர் சியாமா மொஹமட் பெற்றுக்கொண்டார்.
மேலும், பிரதேசவாசிகளின் உதவியுடன் அல்-பலாஹ் மகா வித்தியாலயத்திற்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ள காணியில் புதிய பாடசாலைக் கட்டடம் அமைப்பதற்குத் தேவையான உதவிகளை பெற்றுத்தருமாறு கோரும் மகஜர் ஒன்றும் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலியிடம் பாடசாலை நிர்வாகத்தினால் கையளிக்கப்பட்டது.
இஸ்மதுல் றஹுமான்












