இலங்கையில் இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் 93,635 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், நோய் காரணமாக 71 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள 76 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களில் 52.94 சதவீதத்திற்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாகாணத்தில் 13,719 பேரும், மத்திய மாகாணத்தில் 8,476 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 19,945 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பில் 18,588 பேரும், கண்டியில் 6,786 பேரும், மாத்தறையில் 6,082 பேரும், களுத்துறையில் 6,059 பேரும், காலியில் 5,133 பேரும், இரத்தினபுரியில் 4,981 பேரும் பதிவாகியுள்ளனர்.
மாதாந்த பதிவுகளின்படி, ஜூலை மாதத்திலேயே அதிகபட்சமாக 29,964 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஓகஸ்ட் மாதத்தின் முதல் 21 நாட்களில் 8,297 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.








