எல் நினோ காலநிலை நிகழ்வால் ஏற்படக்கூடிய தாக்கங்களை எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் கூட்டம் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கடுமையான வறட்சி நிலை ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்புகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.
வறட்சியால் விவசாயம், பெருந்தோட்டத்துறை, நன்னீர் மீன்பிடி, குடிநீர் விநியோகம் மற்றும் மின்சார உற்பத்தி ஆகிய துறைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு, அதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான நீர் விநியோகத்தை தடையின்றி உறுதி செய்வதுடன், நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம் மீளும் வரை அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்கும் வேலைத்திட்டங்களைத் தயாரிக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.
நீர்த்தேக்கங்கள் முழுமையாக வறண்டு போகும் வரை காத்திருக்காமல், நீர் கட்டுப்பாடுகள் தேவைப்படும் பகுதிகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு, மக்களுடன் கலந்துரையாடி முறையான நீர் விநியோகத் திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பெய்யும் மழையைப் பயன்படுத்தி நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் திறக்கப்படும் வரை காத்திருக்காமல் விவசாய நிலங்களைத் தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், நீர்ப்பாசனத் திணைக்களமும் மகாவலி அதிகாரசபையும் ஒருங்கிணைந்த திட்டத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
எதிர்வரும் மஹா பருவத்திற்குத் தேவையான விதை நெல் மற்றும் உரங்களைப் போதுமான அளவில் பெற்றுக்கொள்வது, வனவிலங்குகளுக்கான நீர் விநியோகத்தை உறுதி செய்வது, நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை விரைவாக புனரமைப்பது மற்றும் வறட்சியால் பாதிக்கப்படும் மீனவ சமூகங்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பிலும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
மேலும், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவதால் அடுத்த ஆண்டு பெப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் மின்சார உற்பத்திக்கு ஏற்படக்கூடிய சவால்களை சமாளிக்க, வழக்கமான தேவையை விட அதிகமான மின்சார உற்பத்தி திறனை கையிருப்பில் வைத்திருப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்கவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.









