நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்வு 21.08.2026 சிறைச்சாலை தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, உயிரிழந்த ஒவ்வொரு அதிகாரியின் குடும்பத்தினருக்கும் மற்றும் பிள்ளைகளுக்கும் தலா 20 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் போது சிறைச்சாலை அவசரப் பிரதிபலிப்பு தந்திரோபாயப் பிரிவைச் சேர்ந்த 10 அதிகாரிகள் உயிரிழந்தனர்.
இதற்கமைய, தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியத்தின் அக்ஹார காப்பீட்டுத் தொகையின் கீழ் அவர்களது உறவினர்களுக்கு இந்த இழப்பீட்டுத் தொகை இன்று வழங்கப்பட்டது.
நிகழ்வில் கருத்துத் தெரிவித்த தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி யுஷான் தரங்க, இவ்வாறான எதிர்பாராத சந்தர்ப்பங்களில், குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் அனைத்தையும் முழுமையாகப் பெறாமல், இந்தச் சூழ்நிலையை எதிர்கொண்ட சிறைத்துறை அதிகாரிகளுக்கு இந்த இழப்பீட்டுத் தொகையை மிக விரைவாகவும் துரிதமாகவும் வழங்க காப்பீட்டு அறக்கட்டளை நிதியம் தீர்மானித்ததாகத் தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறைச்சாலைகள் பதில் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த, உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவது மாத்திரமன்றி, மேலும் பல நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டமொன்றையும் சிறைச்சாலை திணைக்களம் ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.









