ஓட்டுநர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் கவனக்குறைவாக வாகனங்களை விட்டுச் சென்றதைத் தொடர்ந்து, வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இவ்வாறான சம்பவங்களில் வாகனங்களுக்குள் வைக்கப்பட்டிருந்த பெறுமதியான ஆவணங்கள் மற்றும் ஏனைய பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் வேறு பணிகளில் ஈடுபடும்போது வாகனங்களின் இயந்திரங்களை இயக்கிய நிலையிலேயே விட்டுச் சென்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சிலர் மோட்டார் சைக்கிள்கள் அல்லது முச்சக்கர வண்டிகளில் சாவிகளை வைத்துவிட்டுச் செல்வதால், குற்றவாளிகள் சில நொடிகளுக்குள் அவற்றைத் திருடிச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
வீடுகளுக்கு வெளியே வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தும்போதும், குறிப்பாக வீட்டு வாயில்கள் பூட்டப்படாமல் விடப்படும் சந்தர்ப்பங்களிலும் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
நெரிசலான பகுதிகளில் வாகனங்களை நிறுத்தும் போது, அருகிலுள்ள பாதுகாப்பு அதிகாரிக்கு அது தொடர்பில் அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வாகன உரிமையாளர்களைக் கேட்டுக்கொண்டார். வணிக வளாகங்களில் வாகனங்களை நிறுத்தும்போது, அங்குள்ள பாதுகாப்பு அதிகாரி அல்லது ஊழியர் ஒருவருக்கும் தகவல் தெரிவிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
இரவு நேரங்களில் இருண்ட அல்லது மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதிகளில் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தும்போது பொதுமக்கள் கூடுதல் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
வாகனம் திருடப்பட்டால் உடனடியாக 119 அல்லது 118 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு, அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது அருகிலுள்ள பொலிஸ் அதிகாரிக்கு அறிவிக்குமாறும் ASP வூட்லர் கேட்டுக்கொண்டார்









