கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தளதா மாளிகை எசல பெரஹரா திருவிழாவின் இரண்டாவது கும்பல் பெரஹரா இன்று (19) மாலை 6.41 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய பெரஹராவை முன்னிட்டு பொலிஸார் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளனர். இதன்படி, பெரஹரா ஸ்ரீ தளதா மாளிகையிலிருந்து ஆரம்பமாகி தளதா வீதி, டி.எஸ். சேனாநாயக்க வீதி மற்றும் ராஜா வீதி வழியாகச் சென்று மீண்டும் மாளிகையை வந்தடையவுள்ளது.
பெரஹரா காலப்பகுதியில் வீதித் தடைகள் ஏற்படுத்துதல், பாதுகாப்பு கடமைகளில் பொலிஸாரை ஈடுபடுத்துதல், வாகனங்கள் மற்றும் நபர்களை சோதனை செய்தல், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, கட்டுகஸ்தோட்டையிலிருந்து கண்டி நகரை நோக்கி வரும் கனரக வாகனங்கள் மஹய்யாவ சந்திப்பிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாக பொலிஸ் சந்தியை அடைந்து கண்டி நகரை நோக்கி செல்ல முடியும். இலகுரக வாகனங்கள் டி.எஸ். சேனாநாயக்க வீதி, குறுக்கு வீதி மற்றும் யட்டிநுவர வீதி வழியாக மாற்றுப்பாதையில் பயணிக்க முடியும்.
கட்டுகஸ்தோட்டை திசையை நோக்கி வெளியேறும் வாகனங்கள் பொலிஸ் சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாக மஹய்யாவ திசையை நோக்கிச் செல்ல முடியும்.
தன்னேகும்புர மற்றும் அம்பிட்டிய திசைகளிலிருந்து வரும் வாகனங்களுக்கும், கண்டி நகரிலிருந்து அம்பிட்டிய மற்றும் தெல்தெனிய பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களுக்கும் மாற்று வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, கொழும்பு திசையிலிருந்து கண்டி நகருக்குள் நுழைவதற்கும், கண்டியிலிருந்து கொழும்பு திசையை நோக்கி வெளியேறுவதற்கும் வில்லியம் கோபல்லவ மாவத்தை மற்றும் பழைய பேராதனை வீதி ஆகியவற்றை பயன்படுத்த முடியும்.
இந்நிலையில், இலங்கை கலாச்சாரத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் 1716ஆவது ஸ்ரீ தளதா பெரஹரா திருவிழாவின் முதலாவது கும்பல் பெரஹரா நேற்று (18) இரவு 6.52 மணிக்கு ஆரம்பமானது.
முதலாவது கும்பல் பெரஹராவில் புனித தந்தத்தை தாங்கிய பேழையை சுமந்து செல்லும் பாக்கியம் ஸ்ரீ தளதா மாளிகையின் மங்கள யானையான ‘இந்திரராஜா’ யானைக்கு வழங்கப்பட்டது. அதற்கு பக்கபலமாக ‘மியன் ராஜா’ மற்றும் ‘கோட்டே ராஜா’ ஆகிய யானைகள் சென்றன.
பாரம்பரிய மற்றும் வண்ணமயமான நடன நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு கலை அம்சங்களுடன் நடைபெற்ற முதலாவது கும்பல் பெரஹராவைக் காண உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட பெருமளவான மக்கள் திரண்டிருந்தனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹரா திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.










