பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விலங்குகள் (திருத்தம்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல், வடிகால் சேவைகள் (திருத்தம்) சட்டமூலம் ஆகிய இரண்டுக்கும் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன நேற்று (18) சான்றுரையளித்தார்.
விலங்குகள் (திருத்தம்) சட்டமூலம், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரால் கடந்த ஜூலை 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதலாவது மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டு, ஆகஸ்ட் 6ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.
1958ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விலங்குகள் சட்டத்தின் 38ஆம் பிரிவில் காணப்படும் “விலங்கு” என்ற சொல்லுக்கான சட்டரீதியான வரைவிலக்கணத்தை விரிவுபடுத்துவதே இந்தத் திருத்தத்தின் பிரதான நோக்கமாகும்.
இதன் மூலம் ஆடுகள், பன்றிகள் மற்றும் செம்மறியாடுகள் உள்ளிட்ட விலங்குகளை சட்டத்தின் இரண்டாம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்குள் கொண்டுவருவதற்கான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சட்டத்தின் நான்காம் பகுதிக்கு பொருந்தும் வகையில் செம்மறியாடுகள், ஆடுகள், பன்றிகள் மற்றும் கோழிகள் தொடர்பான வரைவிலக்கணங்களும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, தேசிய நீர் வழங்கல், வடிகால் சேவைகள் (திருத்தம்) சட்டமூலம் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சரால் ஜூலை 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதலாவது மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டு, ஆகஸ்ட் 6ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.
இந்தத் திருத்தத்தின் மூலம், 1974ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க தேசிய நீர் வழங்கல், வடிகால் சேவைகள் சட்டம் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளதுடன், நீர் வழங்கல் மற்றும் வடிகால் சேவைகளை வழங்குவது தொடர்பான சபையின் அதிகாரங்களும் பணிகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், கைத்தொழில் பேட்டைகள், கைத்தொழில் பூங்காக்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளுக்கான நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ சேவைகளையும் சபையின் பொறுப்புகளுக்குள் கொண்டுவரும் வகையில் அதன் பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், திறன்மிக்கதும் நிலையானதுமான நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில், ஊழியர் காப்புறுதித் திட்டங்கள், தொழில்நுட்பம், பயிற்சி, ஆய்வக மற்றும் ஆலோசனை சேவைகளை விரிவுபடுத்துவதற்கும் இந்தத் திருத்தத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, விலங்குகள் (திருத்தம்) சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க விலங்குகள் (திருத்தம்) சட்டமாகவும், தேசிய நீர் வழங்கல், வடிகால் சேவைகள் (திருத்தம்) சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க தேசிய நீர் வழங்கல், வடிகால் சேவைகள் (திருத்தம்) சட்டமாகவும் நடைமுறைக்கு வந்துள்ளன.









