இயலாமையுடைய நபர்களுக்கான அரச சேவைகள் மற்றும் நலன்புரி வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான மாவட்ட மட்ட ஆலோசனை நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் கடந்த 12ஆம் திகதி பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் ஆட்சிமுறை வலுப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் (Strengthening Governance Program) ஆதரவுடனும், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அனுசரணையுடனும், பொலன்னறுவை மாவட்ட செயலகத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா, ஒன்றியத்தின் உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் பத்மசிறி பண்டார மற்றும் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ஈ.எம்.டி.எஸ். ஏகநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இயலாமையுடைய நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வி மற்றும் தேர்தல் துறைகளின் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்டோர் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா, அரச நிறுவனங்களில் இதுவரை பதிவு செய்யப்படாத இயலாமையுடைய நபர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேவையான அரச சேவைகள் மற்றும் நலன்புரி வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் சுமார் 30,000 இயலாமையுடைய நபர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள போதிலும், அவர்களில் சுமார் 2,000 பேர் மாத்திரமே உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இயலாமையுடைய நபர்களுக்கான திட்டங்களை அடிமட்டம் வரை கொண்டு செல்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்காக சமூக மட்டத்தில் “பத்துப் பேர் கொண்ட குழுக்கள்” (Committees of 10) அமைக்கப்பட வேண்டும் என முன்மொழிந்தார்.
இதனிடையே, ஆலோசனை நிகழ்ச்சியில் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் மற்றும் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் தொடர்ச்சியான பின்தொடர்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பத்மசிறி பண்டார வலியுறுத்தினார்.
இயலாமையுடைய நபர்கள் தொடர்பான விடயங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்கேற்கச் செய்வதுடன், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையும் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
தற்போது நடைமுறையில் உள்ள கொள்கைகளைச் செயற்படுத்தும்போது காணப்படும் குறைபாடுகளை அடையாளம் காணவும், இயலாமையுடைய நபர்களுக்கு தாமதமின்றி, அணுகக்கூடிய மற்றும் கௌரவமான முறையில் அரச சேவைகளை வழங்குவதற்கான நடைமுறை நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவும் இந்த நிகழ்ச்சி முக்கிய வாய்ப்பாக அமைந்தது.
பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம், பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தலைமையில் நிறுவப்பட்டுள்ளது. இயலாமையுடைய நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை அடையாளம் கண்டு, அவர்கள் தடையற்ற சமூக வாழ்க்கையை முன்னெடுப்பதற்குத் தேவையான தீர்வுகளை வழங்குவதற்கு பங்களிப்பதே இந்த ஒன்றியத்தின் பிரதான நோக்கமாகும்.











