காசா முழுவதும் 21.5 இலட்சத்துக்கும் அதிகமான இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் மிக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக காசா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 8 இலட்சத்து 67 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தற்போது வாழ்வதற்குத் தகுதியற்ற நிலையில் உள்ள தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில், பாரிய மனிதாபிமான பேரழிவு ஏற்படக்கூடும் என ஊடக அலுவலகம் திங்கட்கிழமை (17) எச்சரித்துள்ளது. கூடாரங்களில் வசிப்பவர்களில் 5 இலட்சத்துக்கும் அதிகமானோர் சிறுவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவுக்குள் கிரேன்கள், கடுமையான வானிலையைத் தாங்கக்கூடிய கூடாரங்கள், காப்புப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தங்குமிடப் பொருட்களை உடனடியாக அனுமதிக்குமாறு சர்வதேச சமூகத்திடம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
“நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது” என தெரிவித்துள்ள ஊடக அலுவலகம், இடிபாடுகளை அகற்றுதல், அடிப்படை கட்டமைப்புகளை மீளமைத்தல் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேலின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியில், காசா மக்கள் உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ சேவைகளின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாக சர்வதேச உதவி அமைப்புகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.
காசா அரசாங்க ஊடக அலுவலகத்தின் முந்தைய தரவுகளின்படி, 2023 ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகளின்போது காசா பகுதியின் 90 சதவீத சிவில் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீளக் கட்டியெழுப்புவதற்கான செலவு சுமார் 70 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.









