கலாபூஷணம் எம். அஸ்வத்கான் எழுதிய “எம்.அஸ்வத்கான் சிறுகதைகள்” நூல் வெளியீட்டு விழா நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை வெள்ளவத்தை தழிம் சங்கத்தின் சங்ரபிள்ளை மண்டபத்தில் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நீண்டகால கலைத்துறை அனுபவம் கொண்ட எம். அஸ்வத்கான் பல சிறுகதைகள் மற்றும் நாடகங்களை எழுதியுள்ளதுடன், அவற்றை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை மற்றும் தமிழ் சேவை ஊடாக மேடையேற்றி மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளார். அவரது கலைப் பயணத்தில் முக்கியமான படைப்புகள் தற்போது நூல் வடிவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கலைஞர்களான அப்துல் லத்தீப் மற்றும் மேமன் கவி ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை மேமன் கவி வழங்கினார். சிறப்புரையை பிரபல அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீட் நிகழ்த்தியதுடன், நூலின் கருத்துரையை முல்லை முஸ்ரிபா வழங்கினார். நயவுரையை சிரேஷ்ட அறிவிப்பாளர் புர்கான் பீ இப்திகார் வழங்கினார். நன்றியுரையை நூலாசிரியரின் புதல்வர் தரீக் கான் நிகழ்த்தினார்.
நூலின் முதற்பிரதியை சட்டத்தரணி எம்.ஐ.எம். இஸார் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகள், நூலாசிரியரின் குடும்ப உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் நூலின் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
மேலும், நீண்டகாலமாக கலைத்துறைக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டும் வகையில் நூலாசிரியர் எம். அஸ்வத்கானுக்கு நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.











