சனா, யெமன்: யெமனில் ஹூதி ஆயுதக் குழுவுக்கும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யெமன் அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான மோதலில் ட்ரோன்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது.
கடந்த வாரம் ஹூதிகள் அரசாங்கப் படைகளின் இராணுவ முகாம்கள் மற்றும் படையினரின் ஒன்றுகூடல்களை ஒருவழித் தாக்குதல் ட்ரோன்கள் மூலம் தாக்கினர். இந்தத் தாக்குதல்களில் பல அரசாங்கப் படையினர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.
இதற்குப் பதிலடியாக, அரசாங்கப் படைகள் தொலைவிலிருந்து இயக்கப்படும் ட்ரோன்களைப் பயன்படுத்தி முன்நிலைகளில் உள்ள ஹூதி போராளிகளைத் தாக்கியுள்ளன. யெமனில் நீடித்து வரும் பல ஆண்டுகால மோதலில் ட்ரோன்களின் பயன்பாடு முக்கியத்துவம் பெறுவதை இது எடுத்துக்காட்டுகிறது.
அரசாங்கப் படைகள் தமது ட்ரோன் நடவடிக்கைகள் தொடர்பான காணொளிகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. அவற்றில் ட்ரோன்கள் இலக்குகளை கண்காணித்து குண்டுகளை வீசுதல், போராளிகளை கொல்லுதல், கவச வாகனங்களை அழித்தல் மற்றும் மறைவிடங்களை சேதப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
“அரசாங்கப் படைகள் தற்போது தங்களுக்கென முக்கியமான ஒரு தந்திரோபாய திறனைப் பெற்றுள்ளன. மீண்டும் பயன்படுத்தக்கூடிய தொலைவிலிருந்து இயக்கப்படும் ட்ரோன்கள், ஒப்பீட்டளவில் நிலையான முன்நிலைகளில் நடைபெறும் அன்றாட மோதல்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடும்” என போன் சர்வதேச மோதல் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் மரியஸ் பேல்ஸ் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் உள்ள எஸ். ராஜரத்னம் சர்வதேச கற்கைகள் நிறுவனத்தின் ஆய்வாளர் ரூபென் தாஸ், அரசாங்கப் படைகள் ட்ரோன்களில் இருந்து வெடிபொருட்களை வீசும் நடவடிக்கைகளை பகிரங்கப்படுத்தியுள்ளதாகவும், அவை சுழலும் இறக்கைகள் கொண்ட ட்ரோன்களாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஹூதிகளின் மேம்பட்ட ஆயுதக் களஞ்சியம்!
2014 செப்டெம்பரில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதிகள் யெமனின் தலைநகர் சனாவை கைப்பற்றினர். பலவீனமான இராணுவ எதிர்ப்பைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் அவர்கள் முன்னேறினர்.
இதன் காரணமாக அரசாங்கம் பலவீனமடைந்ததுடன், அப்போதைய ஜனாதிபதி அப்த்-ரப்புஹ் மன்சூர் ஹாதி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பாதுகாப்புக்காக வெளிநாடுகளுக்கு, குறிப்பாக சவூதி அரேபியாவுக்கு வெளியேறினர்.
பல ஆண்டுகளாக ஹூதிகள் ட்ரோன்களை சமச்சீரற்ற போர்முறையின் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர். எதிரிகளின் நிலைகளை கண்காணிப்பதுடன், முன்நிலைகளிலிருந்து வெகு தொலைவில் உள்ள படையினர் கூடும் இடங்கள், கட்டளை மையங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகளையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.
எனினும், சமீபத்திய நாட்களில் மரிப், அல்-ஜவ்ஃப், தைஸ், ஹஜ்ஜா மற்றும் அல்-தாலியா உள்ளிட்ட பல முனைகளில் ஹூதி நிலைகள் மீது அரசாங்கப் படைகள் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி, அவற்றின் காணொளிகளையும் வெளியிட்டுள்ளன.
ஹூதிகளிடம் பல ஆண்டுகால அனுபவமும் மேம்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் கட்டமைப்பும் இருந்தாலும், அவர்களுடன் முழுமையான சமநிலையை அரசாங்கப் படைகள் அடைய வேண்டிய அவசியமில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
“ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஹூதிகளிடமே இன்னும் மேம்பட்ட ட்ரோன் திறன் உள்ளது. அவர்கள் சுமார் ஒரு தசாப்த கால போர் அனுபவத்தையும் பல்வேறு வகையான ட்ரோன் அமைப்புகளையும் கொண்டுள்ளனர்” என பேல்ஸ் தெரிவித்துள்ளார்.
ஹூதிகளின் ஆயுதக் களஞ்சியத்தில் குறுகிய தூர தாக்குதல் ட்ரோன்கள் முதல், யெமனுக்கு அப்பால் உள்ள இலக்குகளையும் தாக்கக்கூடிய நீண்ட தூர ஒருவழி ஆளில்லா விமானங்கள் வரை பல்வேறு அமைப்புகள் உள்ளன.
ஈரானின் தொழில்நுட்ப உதவியுடன், ஹூதிகள் தங்களிடம் உள்ள ட்ரோன்களை மாற்றியமைத்து பயன்படுத்துவதிலும் அனுபவத்தைப் பெற்றுள்ளனர்.
அவர்களிடம் காசெஃப் மற்றும் நீண்ட தூரம் செல்லக்கூடிய சம்மாட் வகை ட்ரோன்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உள்ளன. காசெஃப் ட்ரோன்கள் சுமார் 30 கிலோகிராம் எடையுள்ள வெடிகுண்டுகளை சுமந்து ஒருவழித் தாக்குதல்களை நடத்தக்கூடியவை.
சம்மாட்-3 ட்ரோன்கள் சுமார் 1,500 கிலோமீட்டர் தூரம் வரை பறக்கக்கூடியவை என்றும் சுமார் 18 கிலோகிராம் வெடிபொருட்களை சுமக்கக்கூடியவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போரைப் போன்ற புதிய தந்திரங்கள்!
யெமனில் ட்ரோன் போர் முறைகளில் உக்ரைன் போரில் பயன்படுத்தப்படும் சில புதிய தந்திரங்கள் தோன்றத் தொடங்கியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மரிப் முனையில் ஃபைபர்-ஆப்டிக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தும் FPV ட்ரோன் காணப்பட்டதாகவும், ஃபைபர்-ஆப்டிக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒருவழித் தாக்குதல் ட்ரோன்களுக்கான உதிரிபாகங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, யெமன் அரசாங்கமும் வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்படும் ட்ரோன்களை இராணுவ தேவைகளுக்கு மாற்றியமைத்து வருகிறது.
கடந்த மாதம் யெமன் பாதுகாப்பு அமைச்சு முதன்முறையாக தனது இராணுவ உபகரணங்களின் ஒரு பகுதியாக ட்ரோன்களை காட்சிப்படுத்தியது. எனினும், அவற்றின் வகை, செயல்பாட்டு தூரம் மற்றும் தொழில்நுட்ப திறன்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
அரசாங்கப் படைகளின் ட்ரோன்கள் தற்போது கிட்டத்தட்ட தினசரி நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அவை பெரும்பாலும் தொலைவிலிருந்து இயக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தக்கூடியவையாக உள்ளன.
ட்ரோன்கள் இலக்குகளை கண்காணித்து, குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி, பின்னர் மீண்டும் தளத்திற்குத் திரும்பி அடுத்த நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுகின்றன. போராளிகள், வாகனங்கள், அகழிகள், பாதுகாப்பு நிலைகள் மற்றும் மோட்டார் நிலைகள் மீது அவை பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யெமனில் ட்ரோன்களின் பயன்பாடு இன்னும் உக்ரைன் போருடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. ஆனால் குறைந்த விலையிலான ட்ரோன்கள் சிறிய இராணுவப் பிரிவுகளின் வழக்கமான ஆயுதமாக மாறும் போக்கு யெமனிலும் உருவாகி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஹூதிகளுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்!
சமீப வாரங்களில் யெமன் அரசாங்கம் தனது இராணுவ கட்டமைப்பை ஒரே முடிவெடுக்கும் மையத்தின் கீழ் மறுசீரமைத்துள்ளது. ஹூதிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பும் இன்னும் நிராகரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க ஆதரவு அணியில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இராணுவத்துடன், ஜெயன்ட்ஸ் பிரிகேட்ஸ் மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள அல்-மகா பகுதியில் செயல்படும் கார்டியன்ஸ் ஆஃப் தி ரிப்பப்ளிக் உள்ளிட்ட பல்வேறு ஆயுதக் குழுக்களும் உள்ளன.
அரசாங்கத்தின் ட்ரோன் நடவடிக்கைகள் போர்க்களத்தில் தந்திரோபாய சமநிலையை மாற்றக்கூடும். ஆனால் அது ஹூதிகளை தோற்கடிப்பதற்கான உறுதியான வெற்றியை வழங்கும் எனக் கூற முடியாது.
சனா மையத்தின் மூலோபாய கற்கைகள் ஆய்வு மேலாளர் யசீத் அல்-ஜெட்டாவி, ட்ரோன் நடவடிக்கைகளின் தற்போதைய தீவிரமும் ஒருங்கிணைப்பும் தொடர்ந்து பேணப்பட்டால், அவை போர்க்களத்தில் அரசாங்கப் படைகளின் தந்திரோபாய நிலையை மேம்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஆதரவு படைகள் வெளியிடும் ட்ரோன் தாக்குதல் காணொளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஹூதி போராளிகளின் நடமாட்டம் மற்றும் நிலைகள் பல்வேறு முனைகளிலும் கண்காணிக்கப்படுகின்றன என்ற அச்சம் உருவாகியுள்ளது.
இந்த மாதம் சுமார் ஒரு வார காலப்பகுதியில் 84 ஹூதி போராளிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் 28 பேர் களத் தளபதிகள் எனவும் ஹூதி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
“ட்ரோன் நடவடிக்கைகள் ஹூதிகளுக்கான முன்நிலைப் பகுதிகளை அதிக செலவுமிக்கதாக மாற்றி, அவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, படிப்படியாக அவர்களின் நிலைகளை பலவீனப்படுத்தக்கூடும்” என அல்-ஜெட்டாவி தெரிவித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
அப்ரா அன்சார்









