மத்திய கிழக்கின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
இதன்படி கட்டார், லெபனான், ஜோர்தான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் அவர் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, அப்பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலினால் அந்தந்த நாடுகள் எதிர்நோக்கியுள்ள நிலைமைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர், அதற்காகத் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்தார்.
மேலும், அந்த நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அமைச்சர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார். அந்த நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.
அவசர காலங்களில் கோரப்படும் மனிதாபிமான உதவிகளை வழங்க இலங்கை தயக்கமின்றி முன்வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த மனிதாபிமான அணுகுமுறைக்காக மத்திய கிழக்கு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் அமைச்சர் விஜித ஹேரத்திற்குத் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர். அத்துடன், அங்கிருக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும் அவர்கள் மேலும் உறுதியளித்தனர்.










