நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாகவும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றன.
நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் தற்போது தொடர்ச்சியாக அதிகாலையில் துகள் உறை பனிப்பொழிவும், பகல் நேரங்களில் உஷ்ணமான காலநிலையும், மாலை வேளையிலும் பனிமூட்டம் நிலவி வருகின்றது. பனிமூட்டத்துடன் கூடிய அதிகரித்த கடும் குளிரான காலநிலையும் மாறுபட்டு காணப்படுகின்றன.
இவ்வாறு நிலவும் இதமான காலநிலையை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக அனுபவித்து வருகின்றனர் இவ்வாறான குளு குளு காலநிலையை அனுபவிக்க இலங்கையில் மட்டுமில்லாது, வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக நுவரெலியாவிற்கு உள் நுழையும் பிரதான வீதிகள் சில நேரங்களில் வாகனங்கள் அணிவகுத்துச் செல்கின்றன.
குறிப்பாக வெள்ளிக்கிழமை மாலை முதல் நுவரெலியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது அதுவும் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
நுவரெலியாவிலுள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படுகின்றனர். இதில் விக்டோரியா தாவரவியல் பூங்காவிலும், பழமையான பிரதான தபால் அலுவலகம் பகுதியிலும் நுவரெலியா – பதுளை பிரதான வீதியோரத்தில் உள்ள கிரகரி வாவி பகுதிகளிலும் காலை முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்.
இவர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் ஆடி, பாடி தங்கள் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.










