முச்சக்கர வண்டிகள், பாடசாலைப் போக்குவரத்து சேவைகள் உட்பட ஏனைய வாடகை வாகனப் பயணச் சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், பொறியியலாளர் பீ. ஏ. சந்திரபால தெரிவித்துள்ளார்.
ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, “முச்சக்கர வண்டிகள், பாடசாலை, அலுவலக போக்குவரத்து சேவைகள், வாடகை வாகனங்கள், விசேட சுற்றுலாச் சேவைகள் போன்றவற்றை ஒழுங்குமுறைப்படுத்தும் திட்டத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.
இப் பிரிவில் ஈடுபட்டுள்ளவர்களின் பாதுகாப்பக்காக அரச சார்பற்ற போக்குவரத்து தொழிலாளர் சபையை ஒரு நிறுவனமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதன் மூலம் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்யும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன”
இதுதொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், நிலான் மிருண்டா இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்:
முச்சக்கர வண்டிகள், பாடசாலை மற்றும் அலுவலகப் போக்குவரத்துச் சேவைகள், வாடகை வாகனங்கள் மற்றும் விசேட சுற்றுலாச் சேவைகள் ஆகிய பிரிவுகளில் தரவுகள் சேகரிக்கப்படும். இதற்காக, அரச நிறுவனங்கள் மற்றும் வாகனத் தரிப்பிடங்களில் ஸ்டிக்கர் ஒன்றை நாங்கள் காட்சிப்படுத்துவோம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி தகவல்களைச் சமர்ப்பிக்கலாம். தரவு சேகரிப்பு நவம்பர் 1 ஆம் திகதி முதல் தொடங்குகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.










