11ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தை 06.07.2026 முதல் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இந்த விபத்துத் தடுப்பு வாரத்தை நடைமுறைப்படுத்துவதற்குச் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டின் அரசாங்க வைத்தியசாலைகளில் தங்கிச் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்படும் நோயாளர்களில் கணிசமான சதவீதமானோர் திடீர் விபத்துக்கள் காரணமாகவே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழுதல், வீதி விபத்துக்கள், வேலைத் தளங்களில் ஏற்படும் விபத்துக்கள், நீரில் மூழ்கி ஏற்படும் விபத்துக்கள் மற்றும் வீடுகளில் ஏற்படும் விபத்துக்கள் ஆகியவை அவற்றுள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
சுகாதாரச் சேவைக்கும் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கும் விபத்துக்களால் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப விழா, இன்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அமைச்சின் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கமைய,
இன்று (ஜூலை 06): வீதி விபத்துக்களைத் தடுக்கும் தினம்
நாளை (ஜூலை 07): வேலைத் தளங்களில் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் தினம்
ஜூலை 08: வீடுகள் மற்றும் முதியோர் இல்லங்களில் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் தினம்
ஜூலை 09: நீரில் மூழ்கி ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் தினம்
ஜூலை 10: பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பகல்நேரப் பராமரிப்பு நிலையங்களில் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் தினம்
என நாள்கள் பெயரிடப்பட்டுள்ளன.
இந்த வாரத்திற்குள் நாடு முழுவதிலும் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள், ஆபத்தான இடங்களைக் கண்டறியும் நடவடிக்கைகள், பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கான நடைமுறைச் செயல்பாடுகள் மற்றும் விபத்துக்களைக் குறைப்பதற்கான குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அரசு நிறுவனங்கள், சுகாதார நிறுவனங்கள், கல்வித் துறை, பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினரின் கூட்டுப் பங்களிப்புடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.








