அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின் விலையை ரூ.25 ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
மேலும், லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தி இயங்கும் உணவகங்களில் சாதாரண தேநீர் மற்றும் பால் தேநீர் விலைகளும் உயர்த்தப்படுவதாக சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்ததாவது, சுமார் 25% முதல் 30% வரையான உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்தி வருவதுடன், எல்பி எரிவாயுவின் அதிகரித்த செலவுகளை தாங்குவது கடினமாகியுள்ளது என கூறினார்.
இதன்படி, அத்தகைய உணவகங்களில் சாதாரண தேநீரின் விலை ரூ.5 ஆகவும், பால் தேநீரின் விலை ரூ.10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேவேளை, சிற்றுண்டி வகைகளின் விலையும் ரூ.5 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனினும், முட்டை ரொட்டி மற்றும் பரோட்டா விலைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என சங்கம் குறிப்பிட்டுள்ளது.










