இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் மிகப்பெரிய கிளைச் சங்கமான கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம், முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியாக்கத்தை சவால் செய்து உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
7,000க்கும் மேற்பட்ட சட்டத்துறை நிபுணர்களைக் கொண்ட இந்தச் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் சதுன் நாகஹவத்த மற்றும் செயலாளர் லஹிரு வெல்கம ஆகியோர் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
SC/SD/81/2026 என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், முன்மொழியப்பட்ட திருத்தத்தின் சில விதிகள், மக்களின் இறையாண்மை நீதித்துறை அதிகாரத்தைப் பாதுகாக்கும் அரசியலமைப்பு விதிகளுக்கு முரணானவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விதிகள் அரசியலமைப்பு ஆட்சி, நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை தொடர்பில் கேள்விகளை எழுப்புவதாக கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
22ஆவது திருத்தச் சட்டமூலம் கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி நளின் சமரக்கோன் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.









