அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்களை இன்று (03) தாக்கல் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம், குறித்த எழுத்துமூல சமர்ப்பணங்களை இன்று பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நேற்று (02) நிறைவடைந்தது.
விசாரணையை நிறைவு செய்த நீதியரசர்கள் குழாம், மனுதாரர்கள் தரப்பில் ஏதேனும் எழுத்துமூல சமர்ப்பணங்கள் இருப்பின் அவற்றை இன்று சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கும் வியாக்கியானம் பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தெரிவித்துள்ளது.









