எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் நான்காவது கூட்டம் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எல்-நினோ தாக்கம் காரணமாக வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், எல்-நினோ காலநிலையால் மரக்கறி மற்றும் பழச்செய்கைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பது மற்றும் நாட்டில் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதுவரை ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் எல்-நினோ தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவர்களின் அன்றாட வாழ்க்கையை வழமைபோன்று முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான தடையற்ற நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் முன்னேற்றமும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
இதனிடையே, பெரும்போகத்தை ஆரம்பிப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பை எதிர்வரும் செப்டம்பர் 4ஆம் திகதி நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், எல்-நினோ தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள ஆறு மாவட்டங்களின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ‘சூம்’ தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்துரையாடல் ஒன்றை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.விசேட அமைச்சரவை உபகுழுவின் அடுத்த கூட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் திகதி நடத்தவும் இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.








