இலங்கையில் விவசாய மற்றும் வனப் பாதுகாப்புத் திட்டமொன்றில் இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 07.05.2024 ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கையின் காலநிலை மாற்ற செயலகம் சார்பாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, காலநிலை இடர் மன்றம் (CVF) சார்பாக அதன் பொதுச் செயலாளர் முன்னாள் மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நஷிட் மற்றும் போர்த்துக்கலின் Nativa Capital நிறுவனம் சார்பில் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி கார்லோஸ் கோமஸ் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
.
விவசாய விளைச்சல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட மற்றும் நிலைபேறான விவசாய முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இலங்கையில் உள்ள கிராமப்புற சமூகங்களின் வீட்டு விவசாயத்தை மேம்படுத்துவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையில் உள்ள பல விவசாய நிலங்கள் தற்போது சிறிய அளவில் உள்ளன. எனவே, குறைந்த விளைச்சல் மற்றும் குறைந்த வருமானம் ஆகியவற்றால் இவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதன் காரணமாக 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் 15,000 விவசாயிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பையும் தொழில்நுட்ப அறிவையும் வழங்கும் முன்னோடித் திட்டம் அனுராதபுரம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளடங்கியுள்ள விவசாயம் மற்றும் காடுவளர்ப்புத் திட்டங்கள், காலநிலை பாதிப்பு மன்றத்தின் (CVF) ஆதரவுடன் இலங்கையால் வரையப்பட்ட இலங்கையின் காலநிலை தாங்கும் திட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நிலையான விவசாயத்தின் மூலம் வலுவான ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஜனாதிபதி ஊடக மையத்தில் 07.05.2024 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.