கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் நாடு தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், தனிப்பட்ட நோக்கங்களை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கத்தில் நேற்று நடைபெற்ற அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தின் 10 ஆவது வருடாந்த மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் புதிய கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது அதனை கல்வி நிபுணர்களுக்கு மாத்திரமானதாக மட்டுப்படுத்தாமல், பாடசாலை ஆசிரியர்கள், பொருளாதார துறையினர், அகில இலங்கை வளவாளர்கள் சங்கம் உள்ளிட்ட தரப்பினரையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டியது அவசியம்.
அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை வழங்குவதே கல்வி அமைச்சின் பொறுப்பாகும். அதற்கு மேலதிகமான பிரத்தியேக வகுப்பு முறைமைகள் நாட்டுக்குள் உருவாகி வெகுவாக வளர்ந்துள்ளன.
அன்று கல்வித் துறையில் காணப்பட்ட குறைப்பாடுகள் மற்றும் அரசியல் தலையீடுகளை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் மாற்று வழியாக பிரத்தியேக வகுப்பு முறையை தெரிவு செய்தனர். இன்று பாடசாலைக் கல்வியும் பிரத்தியேக வகுப்பு முறையும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டு முன்னேற்றம் கண்டுள்ளன என்றார்.