யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் தபால் பெட்டிக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி, கற்பூரம் காட்டி, தேங்காய் உடைத்து இன்று (18) நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று மதியம் 2 மணியளவில் ஒன்றுகூடிய வேலையற்ற பட்டதாரிகள், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு பதிவு தபால் மூலம் மகஜர் ஒன்றை அனுப்பி வைத்தனர்.
ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், பட்டதாரிகள் 5,000 பேர் மட்டுமே உள்வாங்கப்படவுள்ளதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மகஜரை தபால் மூலம் அனுப்பிய பின்னர், தபால் பெட்டிக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி, கற்பூரம் காட்டி, தேங்காய் உடைத்து பட்டதாரிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அத்துடன், 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தமது வேலைவாய்ப்புக்காக கடவுளின் அருளுடனும், தமது தாய், தந்தையர்களாகக் கருதும் பொதுமக்களின் ஆதரவுடனும் தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் வேலையற்ற பட்டதாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.









