வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்தியர்கள் முன்னெடுத்து வரும் சட்டப்படி பணி செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, அவசரகால தேவைகளின்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் பணியாற்றும் கால்நடை வைத்திய அதிகாரிகளின் சேவையைப் பெற்றுக்கொள்ள சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் மிருகக்காட்சிச்சாலை கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலதிக சேவை நேரக் கொடுப்பனவு, அபாயக் கொடுப்பனவு வழங்குதல், விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் கடமையாற்றும் முறையை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, குறித்த சங்கம் கடந்த ஜூன் 1ஆம் திகதி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது.
இதன்படி, இரண்டரை மாதங்களுக்கும் மேலாக வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்தியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என வனஜீவராசிகள் மற்றும் மிருகக்காட்சிச்சாலை கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் நிஹால் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.









