தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நாளை (13) குறைந்த அழுத்தப் பிரதேசமொன்று உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், கடலில் பயணம் செய்வோரும் கடற்றொழிலாளர்களும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று (12) காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வடகிழக்குத் திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து காற்று வீசக்கூடும் எனவும், காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வரை காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண நிலையில் காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இதன்போது, குறித்த கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையை அடையக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.







