நாடு முழுவதும் ஒக்டோபர் 19 முதல் 21ஆம் திகதி வரை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு, ஒரு மணிநேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் நிறுவனமான (NSO) அனுமதி கோரியுள்ளது.
நாட்டை நான்கு வலயங்களாகப் பிரித்து, ஒவ்வொரு வலயத்திலும் தலா ஒரு மணிநேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக NSO நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி புத்திக சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், இன்று மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையான காலப்பகுதியில் குறித்த மின்வெட்டை அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
இதேபோன்ற ஒரு மணிநேர மின்வெட்டை நாளை (20) மற்றும் எதிர்வரும் புதன்கிழமை (21) ஆகிய தினங்களிலும் அமுல்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், முன்மொழியப்பட்டுள்ள மின்வெட்டு அமுலாக்கம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டதாகும்.








